தோற்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், கொஞ்சம் கூட போராடாமல் தோற்பது எரிச்சல். அதுவும் அதற்கு முந்தைய பந்தயங்களில் சகட்டு மேனிக்கு அடித்து ஜெயித்தவர்கள்… ஐம்பது ரன்னுக்கு ஐந்து விக்கெட் இழப்பது அராஜகம். மூன்றாவது ஒரு தினப்போட்டியின் மூலம் அறிந்து கொண்ட பாடங்கள்:-
(1) தூக்கம் ரம்மியமானது. சேவாக்கின் சிக்ஸர்களையும், டோனியின் விளாசல்களையும் விட… நம்பத்தகுந்தது!
(2) சச்சின் இப்போதைக்கு விளையாடுவதாயில்லை.
(3) கங்குலி டாஸ் போடுவதையும், மிஸ் பீல்ட் செய்வதையும் மட்டுமே செய்வதற்காக அணியில் இருந்து வருகிறார்.
(4) யுவராஜ், கெய்ப் - ஆறு ஒரு தினப்போட்டிக்கு ஒரு முறை நன்றாக விளையாடுவார்கள். மற்றபடி அவர்கள் நல்ல பீல்டர்கள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு பந்தயத்தைப் பார்க்க வேண்டும்.
(5) நமது வேகப் பந்து வீச்சாளர்களுக்கு, எப்போது எங்கு எதற்காக ‘உவ்வா’ ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது.
(6) இது போன்று ஆயிரம் முறை நடந்தாலும், இரண்டு வெற்றிகள் தொடர்ந்து கிடைத்தால்…இந்தப் பாழாய்ப் போன புத்திக்குத் தெரியாது!
முஷாரப் டெல்லி வரும் போது, இந்தியா 5-0 என்று முன்னணியில் இருப்பதை விட இந்தியா மூன்று-பாகிஸ்தான் இரண்டு என்று வெற்றிக் கணக்கு இருந்தால் தானே, அந்தப் போட்டிக்கும் ஒரு மரியாதை இருக்கும்! இந்தத் தொடர் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமென்பதற்காக, ‘பாவ்லா’ விளையாட்டு விளையாடுகிறார்களோ…என்ன கருமமோ, யார் கண்டது?
- அருண் வைத்யநாதன்